Tamil
Surah Al-Ankaboot ( The Spider ) - Aya count 69
"நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம்" என்று கூறுவதனால் (மட்டும்) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா?
நிச்சயமாக அவர்களுக்கு முன்னிருந்தார்களே அவர்களையும் நாம் சோதித்திருக்கின்றோம் - ஆகவே உண்மையுரைப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் அறிவான்; இன்னும் பொய்யர்களையும் அவன் நிச்சயமாக அறிவான்.
அல்லது தீமை செய்கிறார்களே அவர்கள் நம்மைவிட்டும் தாங்கள் தப்பிக் கொள்வார்கள் என்று எண்ணிக் கொண்டார்களா? அவர்கள் (அவ்வாறு) தீர்மானித்துக் கொண்டது மிகவும் கெட்டது.
எவர் அல்லாஹ்வைச் சந்திப்போம் என்று நம்புகிறார்களோ அவர்கள் (அதற்காக நல்ல அமல்களைச் செய்து கொள்ளடடும்) ஏனெனில் அல்லாஹ் (அதற்காகக் குறித்துள்ள) தவணை நிச்சமயாக வருவதாக இருக்கிறது அவன் (யாவற்றையும்) செவியேற்பவனாகவும், நன்கு அறிபவனாகவும் இருக்கின்றான்.
இன்னும், எவர் (அல்லாஹ்வின் பாதையில்) உழைக்கிறாரோ அவர் நிச்சயமாகத் தமக்காகவே உழைக்கிறார் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார் (உதவி எதுவும்) தேவைப்படாதவன்.
ஆகவே, எவர்கள் ஈமான் கொண்டு நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்களுடைய தீங்குகளை அவர்களை விட்டும் நிச்சயமாக நீக்கி விடுவோம்; இன்னும், அவர்கள் செய்த நன்மைகளுக்கு அவற்றைவிட மிகக அழகான கூலியை, நிச்சயமாக நாம் அவர்களுக்கு கொடுப்போம்.
தன் தாய் தந்தையருக்கு நன்மை செய்யும்படியாக நாம் மனிதனுக்கு வஸிய்யத்து செய்திருக்கிறோம்; எனினும், (மனிதனே!) உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணையாக்கும்படி அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால், நீ அவ்விருவருக்கும் கீழ்படிய வேண்டாம்; என்னிடமே உங்கள் அனைவரின் மீளுதலும் இருக்கிறது நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அப்போது நான் உங்களுக்கு அறிவிப்பேன்.
அன்றியும் எவர் ஈமான் கொண்டு, நற்கருமங்களைச் செய்கிறார்களோ அவர்களை நல்லடியார்களுடன் நிச்சயமாக நாம் சேர்த்து விடுவோம்.
மேலும், மனிதர்களில் சிலர் "நாங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைக் கொண்டுள்ளோம்" என்று சொல்கிறார்கள்; எனினும், அவர்களுக்கு அல்லாஹ்வின் பாதையில் துன்பம் உண்டானால், மனிதர்களால் ஏற்படும் அந்த இம்சையை அல்லாஹ்வின் வேதனைபோல் கருதி (உம்மை விட்டும் நீங்கள் முனைந்து) விடுகிறார்கள்; ஆனால் உம் இறைவனிடத்திலிருந்து உதவி வரும்போது "நிச்சயமாக நாங்கள் உங்களுடனே தான் இருந்தோம்" என்று கூறுகிறார்கள். அல்லாஹ் அகிலத்தாரின் இதயங்களில் இருப்பவற்றை நன்கறிந்தவனாக இல்லையா?
அன்றியும், நம்பிக்கை கொண்டவர்களை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான்; நயவஞ்சகர்களையும், அவன் நிச்சயமாக நன்கறிவான்.
நிராகரிப்பவர்கள் நம்பிக்கை கொண்டவர்களிடம்; "நீங்கள் எங்கள் வழியை (மார்க்கத்தைப்) பின்பற்றுங்கள்; உங்கள் குற்றங்களை நாங்கள் சுமந்து கொள்கிறோம்" என்று கூறுகிறார்கள்; ஆனால், அவர்கள் தம் குற்றங்களிலிருந்தும் எதையும் சுமப்பவர்களாக (தாங்குபவர்களாக) இல்லையே! எனவே (உங்கள் குற்றங்களை சுமப்பதற்காகச் சொல்லும்) அவர்கள் நிச்சயமாக பொய்யர்களே!
ஆனால் நிச்சயமாக அவர்கள் தங்களுடைய (பளுவான பாவச்) சுமைகளையும், தம் (பளுவான பாவச்) சுமைகளுடன் (அவர்கள் வழிகெடுத்தோரின் பளுவான பாவச்) சுமைகளையும் சுமப்பார்கள்; கியாம நாளன்று அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக விசாரிக்கப்படுவார்கள்.
மேலும்; திடனாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம்; ஆக, அவர்கள் மத்தியில் அவர் ஐம்பது குறைய ஆயிரம் ஆண்டுகள் தங்கியிருந்தார்; ஆனால் அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்தமையால் அவர்களைப் பிரளயம் பிடித்துக் கொண்டது.
(அப்போது) நாம் அவரையும், (அவருடன்) கப்பலில் இருந்தோரையும் காப்பாற்றினோம்; மேலும், அதை உலக மக்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம்.
இன்னும் இப்றாஹீமையும் (தூதராக நாம் அனுப்பினோம்); அவர் தம் சமூகத்தாரிடம்; "அல்லாஹ்வை நீங்கள் வணங்குங்கள்; அவனிடம் பயபக்தியுடன் இருங்கள்; நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு நன்மையுடையதாக இருக்கும்" என்று கூறிய வேளையை (நபியே! நினைவூட்டுவீராக).
அல்லாஹ்வையன்றி, சிலைகளை வணங்குகிறீர்கள் - மேலும், நீங்கள் பொய்யைச் சிருஷ்டித்துக் கொண்டீர்கள்; நிச்சயமாக, அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கி வரும் இவை உங்களுக்கு ஆகார வசதிகள் அளிக்கச் சக்தியற்றவை ஆதலால், நீங்கள் அல்லாஹ்விடமே ஆகார வசதிகளைத் தேடுங்கள்; அவனையே வணங்குங்கள்; அவனுக்கே நன்றி செலுத்துங்கள்; அவனிடத்திலேயே நீ; ங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்.
இன்னும் நீங்கள் பொய்ப்பிக்க முற்பட்டால் (தளர்ந்து போவதில்லை - ஏனெனில்) உங்களுக்கு முன்னிருந்த சமுதாயத்தவரும் (அவர்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்களை இவ்வாறே) பொய்ப்பிக்க முற்பட்டார்கள்; ஆகவே, (இறை) தூதரின் கடமை (தம் தூதை) பகிரங்கமாக எடுத்துரைப்பதன்றி (வேறு) இல்லை."
அல்லாஹ் எவ்வாறு முதலில் படைப்பைத் துவங்கிப் பிறகு (அதனை எவ்வாறு) தன்பால் மீட்டுகிறான் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபம்.
"பூமியில் நீங்கள் பிரயாணம் செய்து, அல்லாஹ் எவ்வாறு (முந்திய) படைப்பைத் துவங்கிப் பின்னர் பிந்திய படைப்பை எவ்வாறு உண்டு பண்ணுகிறான் என்பதைப் பாருங்கள்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுள்ளவன்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
தான் நாடியவரை அவன் வேதனை செய்கிறான்; இன்னும் தான் நாடியவருக்குக் கிருபை செய்கிறான் - (இறுதியில்) அவனிடமே நீங்கள் மீட்டப்படுவீர்கள்.
பூமியிலோ, வானத்திலோ நீங்கள் (அவனை) இயலாமல் ஆக்குபவர்களல்லர். மேலும், உங்களுக்கு அல்லாஹ்வையன்றி (வேறு) பாதுகாவலனோ, உதவியாளனோ இல்லை.
இன்னும், எவர் அல்லாஹ்வின் வசனங்களையும், அவனைச் சந்திப்பதையும் நிராகரித்தார்களோ, அவர்கள் தாம் என் ரஹ்மத்தை விட்டு நிராசையானவர்கள்; மேலும், இ(த்தகைய)வர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு.
இதற்கு அவருடைய சமூகத்தாரின் பதிலெல்லாம் "அவரைக் கொன்று விடுங்கள் அல்லது நெருப்பிலிட்டுப் பொசுக்குங்கள்" என்று கூறியதைத் தவிர வேறில்லை ஆனால், அல்லாஹ் அவரை (அந்த) நெருப்பிலிருந்து ஈடேற்றினான்; நிச்சயமாக இதில், ஈமான் கொண்ட சமூகத்தோருக்கு தக்க அத்தாட்சிகள் இருக்கின்றன.
மேலும் (இப்றாஹீம்) சொன்னார்; "உலக வாழ்ககையில் அல்லாஹ்வையன்றி (சிலரை) வணக்கத்திற்குரியவர்களாக நீங்கள் ஆக்கிக் கொண்டது (அவர்கள் மீது) உங்களிடையேயுள்ள நேசத்தின் காரணத்தினால்தான்; பின்னர் கியாம நாளன்று உங்களில் சிலர் சிலரை நிராகரிப்பார்கள்; உங்களில் சிலர் சிலரை சபித்துக் கொள்வர்; (இறுதியில்), நீங்கள் ஒதுங்குந்தலம் (நரக) நெருப்புத்தான்; (அங்கு) உங்களுக்கு உதவியாளர் எவருமில்லை.'
(இதன் பின்னரும்) லூத் (மட்டுமே) அவர் மீது ஈமான் கொண்டார்; (அவரிடம் இப்றாஹீம்); "நிச்சயமாக நான் என் இறைவனை நாடி (இவ்வூரை விட்டு) ஹிஜ்ரத் செய்கிறேன்; நிச்சயமாக அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்" என்று கூறினார்.
மேலும், அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் அளித்தோம்; இன்னும் அவருடைய சந்ததியலே, நபித்துவத்தையும், வேதத்தையும் ஏற்படுத்தினோம்; அவருக்கு அவருடைய கூலியை இவ்வுலகத்திலும் கொடுத்தோம்; நிச்சயமாக மறுமையில் அவர் நல்லவர்களில் ஒருவராவார்.
மேலும், லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பி வைத்தோம்); அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்; "நிச்சயமாக நீங்கள் உலகத்தாரில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலை செய்ய முனைந்து விட்டீர்கள்.
நீங்கள் ஆண்களிடம் (மோகம் கொண்டு) வருகிறீர்களா? வழி மறி(த்துப் பிராயாணிகளைக் கொள்ளையடி)க்கவும் செய்கின்றீர்கள்; உங்களுடைய சபையிலும் வெறுக்கத்தக்கவற்றைச் செய்கின்றீர்கள்" என்று கூறினார்; அதற்கு அவருடைய சமூகத்தாரின் பதில்; "நீர் உண்மையாளரில் (ஒருவராக) இருப்பின் எங்கள் மீது அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு வருவீருhக" என்பது தவிர வேறு எதுவுமில்லை.
அப்போது அவர்; "என் இறைவனே! குழப்பம் செய்யும் இற்த சமூகத்தாருக்கு எதிராக எனக்கு நீ உதவி புரிவாயாக!" என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.
நம் தூதர்(களாகிய மலக்கு)கள் இப்ராஹீமிடம் நன்மாராயத்துடன் வந்தபோது, "நிச்சயமாக நாங்கள் இவ்வூராரை அழிக்கிறவர்கள்; ஏனெனில் நிச்சயமாக இவ்வூரார் அநியாயக்காரர்களாக இருக்கின்றனர்" எனக் கூறினார்கள்.
"நிச்சயமாக அவ்வூரில் லூத்தும் இருக்கிறாரே" என்று (இப்றாஹீம்) கூறினார்; (அதற்கு) அவர்கள் அதில் இருப்பவர்கள் யார் என்பதை நாங்கள் நன்கறிவோம்; எனவே நாங்கள் அவரையும்; அவருடைய மனைவியைத் தவிர, அவர் குடும்பத்தாரையும் நிச்சயமாகக் காப்பாற்றுவோம்; அவள் (அழிந்து போவோரில் ஒருத்தியாக) தங்கி விடுவாள் என்று சொன்னார்கள்.
இன்னும் நம் தூதர்கள் லூத்திடம் வந்த போது அவர்களின் காரணமாக அவர் கவலை கொண்டார். மேலும் அவர்களால் (வருகையால்) சங்கடப்பட்டார்; அவர்கள் 'நீர் பயப்படவேண்டாம், கவலையும் படவேண்டாம்' என்று கூறினார்கள். நிச்சயமாக நாம் உம்மையும் உன் மனைவியைத் தவிர உம் குடும்பத்தினரையும் காப்பாற்றுவோம்; அவள் (உம்மனைவி அழிந்து போவோரில் ஒருத்தியாக) பின் தங்கி விடுவாள்.
நிச்சயமாக, நாங்கள் இவ்வூரார் மீது, இவர்கள் செய்து கொண்டிருக்கும் பாவத்தின் காரணமாக, வானத்திலிருந்து வேதனையை இறக்குகிறவர்கள் ஆவோம்.
(அவ்வாறே அவ்வூரார், அழிந்தனர்) அறிவுள்ள சமூகத்தாருக்கு இதிலிருந்தும் நாம் ஒரு தெளிவான அத்தாட்சியை விட்டு வைத்துள்ளோம்.
மேலும், மத்யன் (ஊராருக்கு) அவர்கள் சகோதரராகிய ஷுஐபை (அனுப்பி வைத்தோம்); ஆகவே அவர்; "என் சமூகத்தாரே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; இறுதி நாளை (நம்பி) எதிர்பாருங்கள், மேலும், பூமியில் குழப்பம் செய்வோராக, (விஷமிகளாகத்) திரியாதீர்கள்" என்று கூறினார்.
எனினும் அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள்; ஆதலால் அவர்களைப் பூகம்பம் பிடித்துக் கொண்டது ஆகவே, அவர்கள் தம் வீடுகளில் அதிகாலையில் (மரித்து) முகங்குப்புற விழுந்து கிடந்தார்கள்.
இவ்வாறே, ஆது, ஸமூது (சமூகத்தாரையும் அழித்தோம்); அன்றியும் அவர்கள் வசித்த இடங்களிலிருந்து (ஒரு சில சின்னங்கள்) உங்களுக்குத் தெளிவாக தென்படுகின்றன ஏனெனில் ஷைத்தான் அவர்களுடைய (தீச்)செயல்களை அவர்களுக்கு அழகாகக் காண்பித்து அவர்கள் நல்லறிவு படைத்தவர்களாக இருந்தும், அவர்களை நேர்வழியில் (போக விடாது) தடுத்து விட்டான்.
இன்னும் ஃகாரூனையும், ஃபிர்அவ்ன்னையும், ஹாமானையும் (அழித்தோம்); திடனாக, அவர்களிடம் மூஸா தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தார்; எனினும், (அவற்றை நிராகரித்து) அவர்கள் பூமியில் பெருமையடித்து நின்றார்கள். ஆனால் அவர்கள் (அழிவிலிருந்து) தப்பித்தார்களில்லை.
இவ்வாறு, நாம் ஒவ்வொருவரையும் அவரவர் செய்த பாவத்தின் காரணமாகப் பிடித்தோம்; அவர்களில் சிலர் மீது கடும்புயல் மூலமாக கல்மாரியை அனுப்பினோம்; அவர்களில் சிலரை பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது அவர்களில் சிலரைப் பூமியினுள் அழுந்தச் செய்தோம்; அவர்களில் சிலரை மூழ்கடித்தோம்; ஆனால் அல்லாஹ் அவர்களுக்கு அநியாயம் செய்வதற்காக இருக்க வில்லை அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்கள்.
அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்பவர்களுக்கு உதாரணம் சிலந்திப் பூச்சியின் உதாரணம் போன்றது அது (தனக்காக) ஒரு வீட்டைக் கட்டியது ஆனால் நிச்சயமாக வீடுகளிலெல்லாம் மிகவும் பலஹீனமானது சிலந்திப்பூச்சியின் வீடேயாகும் - இதை அவர்கள் அறிந்து கொண்டிருப்பார்களாயின் (தாங்கள் இணையாக எடுத்துக் கொண்டவற்றின் பலஹீனத்தை அறிவார்கள்).
நிச்சயமாக அல்லாஹ்வையன்றி அவர்கள் எதை (நாயனென) அழைக்கிறார்களோ, அதை அவன் அறிகிறான் - இன்னும் அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
இவ்வுதாரணங்களை நாம் மனிதர்களுக்காக விளக்கி வைக்கிறோம் - ஆனால் இவற்றை சிந்தித்தறிவோர் தவிர வேறெவரும் உணர்ந்து கொள்ள மாட்டார்கள்.
வானங்களையும், பூமியையும் அல்லாஹ் உண்மையைக் கொண்டே படைத்துள்ளான் - நிச்சயமாக இதில் முஃமின்களுக்கு அத்தாட்சி இருக்கிறது.
(நபியே!) இவ்வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் எடுத்தோதுவீராக இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். நிச்சயமாக, அல்லாஹ்வின் திக்ரு (தியானம்) மிகவும் பெரிதா(ன சக்தியா)கும்; அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறான்.
இன்னும், நீங்கள் வேதத்தையுடையவர்களுடன் - அவர்களில் அக்கிரமமாய் நடப்பவர்களைத் தவிர்த்து, (மற்றவர்களுடன்) அழகிய முறையிலேயன்றித் தர்க்கம் செய்யாதீர்கள்; "எங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் உங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் நாங்கள் ஈமான் கொள்கிறோம்; எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் ஒருவனே - மேலும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபட்டு, நடப்போர் (முஸ்லிம்கள்) ஆவோம்" என்று கூறுவீர்களாக.
இவ்விதமே, (அவர்களுக்கு வேதம் இறக்கியது போன்றே நபியே!) உமக்கும் இவ்வேதத்தை இறக்கியிருக்கிறோம்; ஆகவே, நாம் (முன்னர்) எவருக்கு வேதத்தை, வழங்கியுள்ளோமோ, அவர்கள் இதனை நம்பி ஏற்றுக் கொள்கிறார்கள். மேலும், இதை நம்பி ஏற்றுக் கொள்வோரும் இவர்களில் இருக்கிறார்கள் - காஃபிர்களைத் தவிர (வேறு) எவரும் நம் வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள்.
அன்றியும் (நபியே!) இதற்கு முன்னர் நீர் எந்த வேதத்திலிருந்தும் ஓதி வந்தவரல்லர்; உம் வலக்கையால் அதை எழுதுபவராகவும் இருக்கவில்லை அவ்வாறு இருந்திருந்தால் இப்பொய்யர்கள் சந்தேகப்படலாம்.
அப்படியல்ல! எவர் கல்வி ஞானம் கொடுக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களின் உள்ளங்களில், தெளிவான வசனங்களாக இது இருக்கிறது - அநியாயக்காரர்கள் தவிர (வேறு) எவரும் நம் வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள்.
"அவருடைய இறைவனிடமிருந்து அவர் மீது அத்தாட்சிகள் ஏன் இறக்கப்படவில்லை?" என்றும் அவர்கள் கேட்கிறார்கள்; "அத்தாட்சிகளெல்லாம் அல்லாஹ்விடம் உள்ளன ஏனெனில் நான் வெளிப்படையாக அச்ச மூட்டி எச்சரிக்கை செய்பவன் தான்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
அவர்களுக்கு ஓதிக்காட்டப்படும் இவ்வேதத்தை நாம் உம் மீது இறக்கியிருக்கிறோம் என்பது அவர்களுக்குப் போதாதா? நிச்சயமாக அ(வ் வேதத்)தில் ரஹ்மத்தும், ஈமான் கொண்ட சமூகத்தாருக்கு (நினைவூட்டும்) நல்லுபதேசமும் இருக்கின்றன.
"எனக்கிடையிலும், உங்களுக்கிடையிலும் சாட்சியாயிருக்க அல்லாஹ்வே போதுமானவன்; வானங்களிலும், பூமியிலும் இருப்பவற்றை அவன் அறிகிறான்; எனவே, எவர் பொய்யானவற்றை நம்பி அல்லாஹ்வை நிராகரிக்கிறார்களோ, அவர்கள் தாம் நஷ்டவாளிகள்" என்று (நபியே!) நீர் கூறும்.
இன்னும், (மறுமையின்) வேதனையைப் பற்றி அவர்கள் உம்மை அவசரப்படுத்துகிறார்கள்; மேலும், (அதற்கெனக்) குறிப்பிட்ட தவணை ஏற்படுத்தப்படாதிருப்பின் அவ்வேதனை அவர்களுக்கு வந்திருக்கும்; எனினும் (அத்தவணையை) அவர்கள் உணர்ந்தறிய முடியாதிருக்கும் நிலையில், அவர்களிடம் அ(வ்வேதனையான)து திடீரென்று வந்து சேரும்.
அவ்வேதனையை அவசரப்படுத்து மாறு அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள் - ஆனால், நிச்சயமாக நரகம் காஃபிர்களைச் சூழ்ந்து கொள்வதாக இருக்கிறது.
அந்நாளில், அவ்வேதனை அவர்களுக்கு மேலிருந்தும், அவர்களுடைய கால்களுக்குக் கீழிருந்தும் அவர்களை மூடிக் கொள்ளும். (அப்போது இறைவன்) "நீங்கள் செய்து கொண்டிருந்த(தின் பய)னைச் சுவைத்துப் பாருங்கள்" என்று கூறுவான்.
ஈமான் கொண்ட என் அடியார்களே! நிச்சயமாக என் பூமி விசாலமானது ஆகையால் நீங்கள் என்னையே வணங்குங்கள்.
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகிக்கக் கூடியதே யாகும்; பின்னர் நீங்கள் நம்மிடமே மீள்விக்கப்படுவீர்கள்.
எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்) அமல்களை செய்கிறார்களோ அவர்களை, சதா கீழே ஆறகள் ஓடிக்கொண்டிருக்கும் சவனபதியிலுள்ள உயர்ந்த மாளிகைகளில், நிச்சயமாக நாம் அமர்த்துவோம்; அவற்றில் அவர்கள் நிரந்தரமாக (நிலைத்து) இருப்பார்கள்; (இவ்வாறாக நற்) செயல்கள் புரிவோரின் கூலியும் பாக்கியம் மிக்கதாகவே உள்ளது.
(ஏனெனில்) அவர்கள் பொறுமையைக் கொண்டார்கள்; மேலும் தங்கள் இறைவன் மீதே முழு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.
அன்றியும் (பூமியிலுள்ள) எத்தனையோ பிராணிகள் தங்கள் உணவைச் சுமந்து கொண்டு திரிவதில்லை அவற்றுக்கும் உங்களுக்கும் அல்லாஹ் தான் உணவளிக்கின்றான் - இன்னும் அவன் (யாவற்றையும் செவிமடுப்பவனாகவும் (நன்கு) அறிபவனாகவும் இருக்கின்றான்.
மேலும், (நபியே!) "நீர் இவர்களிடத்தில் வானங்களையும், பூமியையும் படைத்துச் சூரியனையும் சந்திரனையும் (தன் அதிகாரத்தில்) வசப்படுத்திருப்பவன் யார்?" என்று கேட்டால், "அல்லாஹ்" என்றே இவர்கள் திட்டமாக கூறுவார்கள்; அவ்வாறாயின் அவர்கள் (உண்மையை விட்டு) எங்கே திருப்பப்படுகிறார்கள்?
"அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியவர்களுக்கு உணவை விசாலமாக்குகிறான், தான் நாடியவருக்கு சுருக்கியும் விடுகிறான்; நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொன்றையும் அறிந்தவன்."
இன்னும், அவர்களிடம்; "வானத்திலிருந்து நீரை இறக்கி, பிறகு அதனைக் கொண்டு இப்பூமியை - அது (காய்ந்து) மரித்தபின் உயிர்ப்பிப்பவன் யார்?" என்று நீர் கேட்பீராகில்; "அல்லாஹ்" என்றே இவர்கள் திட்டமாகக் கூறுவார்கள்; (அதற்கு நீர்) "அல்ஹம்து லில்லாஹ் - புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது" என்று கூறுவீராக எனினும் இவர்களில் பெரும்பாலோர் அறிந்துணர மாட்டார்கள்.
இன்னும், இவ்வுலக வாழ்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை - இன்னும் நிச்சயமாக மறுமைக்குரிய வீடு திடமாக அதுவே (நித்தியமான) வாழ்வாகும் - இவர்கள் (இதை) அறிந்திருந்தால்.
மேலும் அவர்கள் மரக்கலங்களில் ஏறிக்கொண்டால், அந்தரங்க சுத்தியுடன் சன்மார்க்கத்தில் வழிப்படடவர்களாக அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர்; ஆனால், அவன் அவர்களை (பத்திரமாகக்) கரைக்கு கொண்டு வந்து விடுங்கால், அவர்கள் (அவனுக்கே) இணைவைக்கின்றனர்.
அவர்கள், நாம் அவர்களுக்கு அளித்துள்ளவற்றுக்கு மாறு செய்து கொண்டு, (இவ்வுலகின் அற்ப) சுகங்களை அனுபவிக்கட்டும் - ஆனால் (தம் தீச்செயல்களின் பயனை) அறிந்து கொள்வார்கள்.
அன்றியும் (மக்காவைச்) சூழவுள்ள மனிதர்கள் (பகைவர்களால்) இறஞ்சிச் செல்லப்படும் நிலையில் (இதை) நாம் பாதுகாப்பான புனிதத் தலமாக ஆக்கியிருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா? இன்னும், அவர்கள் பொய்யானவற்றை நம்பி, அல்லாஹ்வின் அருட்கொடையை நிராகரிக்கிறார்களா?
அன்றியும், அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவனைவிட - அல்லது தன்னிடம் சத்தியம் வந்த போது அதைப் பொய்ப்பிப்பவனைவிட அநியாயம் செய்பவன் யார்? (இத்தகைய) காஃபிர்களுக்கு ஒதுங்குமிடம் நரகத்தில் அல்லவா இருக்கின்றது,
மேலும் எவர்கள் நம்முடைய வழியில் முயல்கின்றார்களோ நிச்சயமாக அவர்களை நம்முடைய நேரான வழிகளில் நாம் செலுத்துவோம்; நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோருடனேயே இருக்கின்றான்.